நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் போனபடி சண்டை போட்டுள்ளனர் கணவனும், மனைவியும்.
இதில் அவர்களது கைக்குழந்தை கீழே தடுமாறி விழுந்து அநியாயமாக உயிரிழந்துள்ளது.
கடையநல்லூர் பக்கமுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குற்றாலிங்கம். இவரது மனைவி முப்புடாதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 மாத ஆண்குழந்தை உண்டு. தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு நடப்பதுண்டாம்.
இதன் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். முப்புடாதி தன் தாய்வீட்டுக்குச் சென்றவர், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
இதனிடையே பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் குழந்தையைக் கோவிலில் தத்துக் கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதாக சொன்ன குற்றாலிங்கம், மனைவி முப்புடாதியையும் குழந்தையும் அவரது தாய் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நேற்று கோவிலுக்குச் சென்றுள்ளார்.
பைக்கில் செல்லும் போதே வழியில் தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த குற்றாலிங்கம் கையால் பின்னால் உட்கார்ந்திருந்த மனைவியை இடிக்க அதில் நிலைகுலைந்த முப்புடாதி கைப்பிள்ளையோடு தவறி விழுந்திருக்கிறார்.
இதில், காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அது இறந்து போனது. காயமடைந்த முப்புடாதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதற்குள் குற்றாலிங்கம் தப்பி விட்டார். அவரை தற்போது தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment