திருநங்கைகளுக்கான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கண் திறப்பு நிகழ்ச்சி வரும் 23ம் திகதி நடைபெறுகிறது.
லட்சக்கணக்காண திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் செவ்வாய்கிழமை சாகைவார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது.
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடப்பதால் கூவாகம், உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர். இதே வேளையில் கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் வழி படுகின்றனர்.
விழாவின் முக்கிய திருவிழாவாக 23ம் திகதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். வரும் 24ம் திகதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து விதவைக் கோலம் பூண்டு அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர். மாலை 5 மணிக்கு உறுமைசோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது.
இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர். இரவு 7 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். தொடர்ந்து 26ம் திகதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.
0 comments:
Post a Comment