புதுவை சினிமா மேலாளர் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த சென்னை மாடலிங் பெண் ரெமோலாவிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனைகளும் நடைபெற்றன. சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் ரெமோலா (21).
கடந்த 18ம் தேதி புதுவையை சேர்ந்த சினிமா லோகேஷன் மேலாளர் குமரன் மீது புதுவை வடக்கு எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். அதில், சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஹெஸ்ட் அவுஸில் 3 நாள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து எஸ்பி ராமராஜ் உத்தரவின்பேரில், புதுவை அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் குமரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே குமரனின் மனைவி கவிதா, எஸ்பி அலுவலகம் வந்து, ரெமோலா எனது கணவரிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வந்தபோது எடுத்த புகைப் படத்தை காட்டி ஸீ5 லட்சம் கேட்டு மிரட்டுவதாக முறையிட்டார். இதையடுத்து, இந்த பிரச்னையில் விரிவான விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவான சினிமா மேலாளர் குமரன் முன்ஜாமீன் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
மாடலிங் பெண் ரெமோலா நேற்று மீண்டும் புதுவை வந்தார். மகளிர் காவல் நிலையத்தில் சப்,இன்ஸ்பெக்டர் லலிதா, அவரிடம் பாலியல் பலாத்கார புகார் குறித்து ரகசிய விசாரணை நடத்தினார். சினிமா மேலாளர் மீது கொடுத்துள்ள புகாருக்கான ஆதாரங்கள் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எந்த ஹெஸ்ட் அவுசில் குமரன் அடைத்து வைத்திருந்தார், எங்கெல்லாம் அழைத்துச் சென்றார், எவ்வளவு பணம் பறித்தார், அந்த பணம் எந்த வங்கியில் எடுக்கப்பட்டது, எத்தனை முறை பலாத்காரத்தில் ஈடுபட்டார், அவருடன் யாராவது வந்தார்களா? என கேள்விகள் கேட்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரெமோலாவுடன் குமரன் நெருக்கமாக இருந்ததற்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் பற்றியும் விசாரணை நடத்தினர். மாடலிங் பெண் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருப்பதால் அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டது. குமரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக அவரது மனைவி அளித்த குற்றச்சாட்டு குறித்தும் ரெமோலாவிடம் விசாரிக்கப்பட்டது. பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளை நடத்தினர்.
இது குறித்து எஸ்பி ராமராஜிடம் கேட்டபோது, பாலியல் புகார் குறித்து மாடலிங் பெண் ரெமோலாவிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாருக்கான ஆதாரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.
0 comments:
Post a Comment