Thursday, June 6, 2013

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நாளை சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இது குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில்,
வரும் 8ம் தேதி விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கவிருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்றார்.

இந்த விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த கல்லூரியில் விழா நடந்தால் விஜய் ரசிகர்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதிய போலீசார் விழாவுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் சிறிய அளவில் விழா நடத்த திட்டமிட்டனர். பின்னர் மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வந்து கலந்து கொள்ளும் பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டதால் தான் இத்தனை குளறுபடியாம். தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாம். 

அதனால் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்களாம்.
மேலும் நாளை அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் விஜய் விழாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் குளறுபடி ஏற்படலாம் என்று கருதியும் போலீசார் அனுமதி மறுத்தனராம். 

மேலும் அரசியல் கட்சியின் தலையீட்டாலும் தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below