Thursday, June 6, 2013

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்க, ஹரி டைரக்டு செய்துள்ள ‘சிங்கம்–2’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நிருபர்களுக்கு சூர்யா பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:–

‘‘சிங்கம் படம் வெளியான பிறகு அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எல்லோரும் கேட்டார்கள். ‘சிங்கம்,’ 2010–ல் வெளியானது. அதற்கு ரசிகர்கள் அளித்த பேராதரவு, பேரன்பு, மரியாதை நான் எதிர்பார்க்காதது. 

அந்த துரைசிங்கம் பாத்திரம் அடைந்த தூரம் மிகவும் அதிகம்.
ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, உற்சாகமும்தான் இரண்டாம் பாகம் எடுக்கும் நம்பிக்கையை கொடுத்தது. ‘சிங்கம்’ படத்தில் நடித்தபோது, சுதந்திரமான ஓட்டம் ஓடினோம். அப்போது எந்த திசை, எவ்வளவு தூரம், என்ன வேகம் என்பது நம் விருப்பமாக இருந்தது. ‘சிங்கம்–2’ எடுத்தபோது, மொத்த படக்குழுவே ஓடினோம்.

‘சிங்கம்–1’தான் எங்களுக்கு போட்டியாக இருந்தது. எல்லோருமே சேர்ந்து குடும்பமாக உழைத்தோம். முதல் படத்தில் உள்ளவர்கள் பலரும் ‘சிங்கம்–2’வில் இருக்கிறார்கள். படத்துக்கு சந்தானம் கூடுதல் நம்பிக்கையாக சேர்ந்திருக்கிறார். அது, மேலும் கலகலப்பு சேர்க்கும். அதேபோல் ஹன்சிகாவும் இந்த படத்தில் சேர்ந்திருக்கிறார்.

அவருடன் இணைந்து முன்பே ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டியது. அப்போது முடியவில்லை. இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் நான் நடித்த முதல் காட்சியே எடுத்தவுடன் அவரை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். எனக்கும், அவருக்கும் அறிமுகம் இல்லை.
ஒரு ஹலோ சொல்லக் கூட வாய்ப்பில்லை. பேசக்கூட அவகாசம் இல்லை. தூக்கிக்கொண்டு ஓடினேன். எந்த காட்சியையும் ஜாலியாக, சுலபமாக நடித்துவிட்டு போனார். ஒரே ‘டேக்’கில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

டைரக்டர் ஹரி கடுமையான உழைப்பாளி. கடந்த சில மாதங்களாக அவர் தினமும் 2 மணி நேரம்தான் தூங்கியிருப்பார். ஹரி டைரக்டு செய்த படங்களில் இந்த படத்துக்குத்தான் அதிக நாள் படப்பிடிப்பு நடந்தது.’’

இவ்வாறு சூர்யா கூறினார்.

நிகழ்ச்சியில் டைரக்டர் ஹரி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், பாடல் ஆசிரியர் விவேகா, தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். 

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below