Friday, May 31, 2013

ரூ 19 கோடி மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பால், இன்று காலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னையில் 2 வங்கிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் என்று கூறி பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்தும் இவர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ 19 கோடி மற்றும் சேலையூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடிகளில் நடிகை லீனா மரியா பாலுக்கும் தொடர்பிருப்பது பின்னர் தெரியவந்ததும் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

கடந்த 28-ந் தேதி டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான போட்டோகிராபர்களும், டி.வி. கேமராமேன்களும் அவரை படம் பிடிக்க நெருங்கினர்.
உடனடியாக அவர் துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக் கொண்டார். பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே டெல்லி நீதிமன்றத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக லீனா கூறியதால்,. இன்று அரசு மருத்துவமனையில் லீனா கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது.
இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below