Monday, May 27, 2013

ஸ்ரீசாந்த் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, அவரிடம் 12 வயது சிறுவன் துஷார், ஏன் இப்படி ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டீர்கள் என்று கேட்டு ஸ்ரீசாந்த்தை அதிர வைத்துள்ளான்.

நேற்று ஸ்ரீசாந்த் டெல்லி நீதிமன்றத்துக்கு முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரைக் காண பெரும் கூட்டம் கூடியிருந்தது. அதில் ஒருவன்தான் 12 வயதான துஷார். நீதிமன்றத்துக்குள் ஸ்ரீசாந்த்துக்கு பின்னால் நின்றிருந்தான் துஷார்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்த ஸ்ரீசாந்த்திடம் எப்படியாவது பேசி விடத் துடித்தான் துஷார். அதைக் கவனித்த ஸ்ரீசாந்த் நேரம் கிடைத்தபோது சிறுவனிடம் திரும்பி, என்ன வேண்டும் என்று துஷாரிடம் பேசினார்.

இதனால் உற்சாகமடைந்த துஷார், ஸ்ரீசாந்த்திடம் படு தெளிவான குரலில், ஏன் சூதாட்டத்தில் ஈடுபட்டீர்கள் என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் சற்றே அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசாந்த் பின்னர் சுதாரித்துக் கொண்டு, இல்லைப்பா, நான் அதைச் செய்யலே என்றார். இருந்தாலும் விடாமல் ஸ்ரீசாந்த்திடம் கேள்விகளை முனுமுனுத்தபடி இருந்தான் துஷார்.

அதன் பின்னர் அருகில் நின்ற செய்தியாளர்கள் பக்கம் திரும்பிய துஷார், ஒரு செய்தியாளர்களிடம் இருந்து ஒரு காகிதத்தை தருமாறு கேட்டான்.
அவரும் கொடுத்தார். அதை ஸ்ரீசாந்த்திடம் நீட்டி, ஆட்டோகிராப் போட்டுத் தருமாறு கேட்டான் துஷார். ஆனால் நீதிமன்றத்துக்குள் அதெல்லாம் செய்யக் கூடாது என்று ஸ்ரீசாந்த் கூறினார்.
இருந்தாலும் விடவில்லை சிறுவன். இதையடுத்து வெளியில் வரும்போது போடுகிறேன் என்றார் ஸ்ரீசாந்த்.

அதன்படி நீதிமன்ற நடவடிக்கை முடிந்து வெளியே வந்தபோது துஷாரிடமிருந்து காகிதத்தை வாங்கிய ஸ்ரீசாந்த், எனக்காக பிரார்த்தனை செய் துஷார் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

இவ்வளவு நடந்தும் ஆட்டோகிராப் கேட்கும் அளவில் ஒரு இரசிகன் இருக்கிறான் என்றால்... ஸ்ரீசாந்த் போன்றவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீசாந்த்துக்கு மேலும் 2 நாள் பொலிஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டப்பட்டது.

அதேபோல இன்னொரு வீரரான அஜீத் சண்டிலா, புக்கிகள் சந்திரேஷ் படேல், அஸ்வனி என்கிற திப்பு ஆகியோருக்கும் 2 நாள் காவல் நீட்டிக்கப்ட்டது.

இதேவேளை, கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோர் இடைத்தரகர்களுடன் பேசிய வீடியோ காட்சியை டெல்லி பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 9ம் திகதி அன்று ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சண்டிகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் இருந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் இருவரும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவரை சந்தித்து பேசிய காட்சிகளும், தரகரிடமிருந்து பரிசு பொருள் பெற்று கொண்ட காட்சிகளும் பதிவாகியுள்ளது.

அப்போது பெண் ஒருவரும் அவர்களுடன் இருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோக்கள் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரமாக இருக்கும் என டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below