Thursday, May 23, 2013


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன், சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அது தோல்வியில் முடிந்த போட்டிகள் குறித்து சந்தேகம் வலுத்துள்ளது.
ஏற்கனவே ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கி கைதானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி தவிர வேறு சில அணிகள் மீதும் சந்தேகம் உள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

மேலும் மொத்தம் 15 போட்டிகளை ஆய்வு செய்து வருவதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் கூறியிருந்தார். தற்போது குருநாத் மெய்யப்பன் சிக்கியுள்ளதால், செனனை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் குறித்த சந்தேகம் வலுப்படுவதாக பேச்சு எழுந்துள்ளது.
மே 5ம் திகதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 139 ஓட்டங்களை எடுத்தது.
வெகு சுலபமாக எட்டக்கூடிய இலக்கு என்று எதிர்பார்த்த நிலையில் வெறும் 79 ஓட்டங்களில் சென்னை சுருண்டு போனது.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் மகா சொதப்பலாக இருந்தது. விளையாடவே மனம் இல்லாதவர்கள் போல விளையாடினர்.
மேலும் துடுப்பாட்ட வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான சென்னை ஆட்டமாக இது இல்லை என்பதே பரவலான கருத்து.

அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான மே 12 போட்டியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உடனான மே 18 போட்டியிலும் மோசமாக ஆடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதெல்லாம் சூதாட்டம் செய்த போட்டிகள் என்று கூற வரவில்லை. ஆனாலும் சந்தேகக் வரிசையில் இவையெல்லாம் கூட இருக்கலாமோ என்ற யூகம் வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி மீதே சூதாட்ட சர்ச்சை கிளம்பியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்துப் போட்டிகளையும் விசாரணைக்குட்படுத்தும் கோரிக்கை எழலாம்.

எனவே அந்த அணிக்கு சிக்கல்கள் வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சென்னை அணி நடப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிய பிறகு, அந்த அணியின் வீரர்கள் யாரேனும், குருநாத் மெய்யப்பனின் தூண்டுதலின் பேரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அல்லது தொடர்பு கொண்டிருந்ததாக உறுதியானால், சென்னையின் சாம்பியன் பட்டம் பறிக்கப்படும் அபாயத்தையும் எதிர்நோக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below