இனி நான் சுதந்திரமானவள். என் வாழ்க்கையை நான்தான் முடிவு செய்வேன், என்று நடிகை அஞ்சலி வீடியோ மூலம் பேட்டியளித்துள்ளார்.
சித்தி மற்றும் இயக்குநர் களஞ்சியம் ஆகியோரின் கொடுமையால் வீட்டைவிட்டு வெளியேறி 5 நாட்கள் தலைமறைவாக இருந்த அஞ்சலி, இப்போது வெளியில் வந்து பேச ஆரம்பித்துள்ளார்.
ஹைதராபாதில் போலீஸ் முன் ஆஜரான பின் நிருபர்களிடம் பேசிய அஞ்சலி, இப்போது வீடியோ மூலம் தனது பேட்டியை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அவற்றிலிருந்து மீண்டு இப்போது வெளியே வந்து விட்டேன். என் சொந்த வாழ்க்கை சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் இனிமேல் நான்தான் எடுப்பேன். என் முழு கவனமும் இனி சினிமாவில்தான் இருக்கும்.
ஏற்கனவே ரவிதேஜாவுடன் ‘பலுபு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தேன். அந்த படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் கொஞ்சம் பாக்கி உள்ளது. அவற்றை முடித்து கொடுப்பேன்.
இந்தியில் தயாரான போல்பச்சன் படம் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. அந்த படத்திலும் நடிக்கிறேன். எனது நடவடிக்கைகளால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இக்கட்டான சூழலில் பத்திரிகைகள், டி.வி.க்கள் மற்றும் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.களஞ்சியம் ஜோடியாக ‘ஊர்சுற்றி புராணம்' என்ற படத்தில் அஞ்சலி 10 நாட்கள் நடித்துள்ளார். அதில் இன்னும் நடிக்க வேண்டி உள்ளது. அப்படம் பற்றி தனது பேட்டியில் அவர் எதுவும் கூறவில்லை.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே அவர் கூறி உள்ளார். எனவே ‘ஊர் சுற்றி புராணம்' படத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
‘போல்பச்சன்' தெலுங்கு படப்பிடிப்பு மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடந்தது. இதில் இன்று பங்கேற்று நடிக்கிறார் அஞ்சலி.
0 comments:
Post a Comment