ஆலப்புழா: ஆட்டோகிராப் கேட்டதற்கு பிடித்து தள்ளியதால், நடிகை நிகிஷா பட்டேலின் டிரைவரை ரசிகர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தலைவன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
புதுமுகங்கள் பாஸ்கரன்-நிகிஷா பட்டேல் நடிக்கும் ‘தலைவன்' படத்திற்கான படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்றது.
டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் நடனம் அமைக்க பள்ளத் துருத்தி என்ற இடத்தில் பாஸ்-நிகிஷா ஆகியோர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். படப்பிடிப்பை காண வந்திருந்த ரசிகர்கள், நிகிலா பட்டேலிடம் ஆட்டோகிராப் கேட்க மொய்த்தனர். ஆனால் நிகிலா அங்கிருந்து கிளம்பி கொச்சி சென்று விமானம் மூலம் மும்பை செல்லும் அவசரத்தில் இருந்தார். இதனையடுத்து ஒரு சிலருக்கு மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு, கூட்டத்தில் இருந்து விடுபட முயன்றார். அவரால் கூட்டத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.
உடனே அவருடைய கார் டிரைவர் கே.எஸ்.குட்டன் கூட்டத்துக்குள் புகுந்து நிகிஷா பட்டேலை மீட்டு அழைத்து வர முயன்றார். ரசிகர்களை பிடித்து அவர் தள்ளியதால், அவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள். டிரைவருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ரசிகர்கள், டிரைவரை பிடித்து அடித்து உதைத்தார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
பட அதிபர் சித்திரைச்செல்வன், டைரக்டர் ரமேஷ் செல்வன் ஆகிய இருவரும் ரசிகர்களை சமாதானப் படுத்திவிட்டு நிகிஷா பட்டேலை அவசரம் அவசரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அதற்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவானதால் படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்து விட்டு, அனைவரும் சென்னைக்கு பேக் அப் ஆனார்கள்.
0 comments:
Post a Comment