ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பத்தின் ஹிட்டுக்கு ரஹ்மான் எந்த அளவுக்கு காரணமோ அதே அளவுக்கு காரணமானவர் அதை அற்புதமாய் படமாக்கிய பரத்பாலா. அவர் இயக்குநராய் அறிமுகமாகும் படம், அதே ரஹ்மானின் இசையுடன் என பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் மரியான்.
கடலும் கடல் சார்ந்த காதலும் என முன்பகுதியில் தென் தமிழ்நாட்டு கடலோரம் பயணிக்கும் கதை காதலிக்கு உதவுவதற்காக ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டுக்கு தனுஷ் வேலைக்கு போவதும் அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதில் மீண்டு வருகிறாரா, காதலியுடன் சேருகிறாரா என்பது தான் கதை.
தனுஷ் நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார் என்றே சொல்லலாம். அதுவும் ஆப்பிரிக்கா எபிசோடில் காட்சிக்கு காட்சி தேசிய விருதை ஞாபகப்படுத்துகிறார். தீவிரவாதிகள் கம்பெனிக்கு போன் போட்டு காசு கேட்க சொல்ல இவர் தன் காதலிக்கு போன் போட்டு விட்டு ஹெல்ப் சார்.. மணி சார் என பேசும் அந்த காட்சி நடிப்பில் அவர் தன் அடுத்த கட்டத்தை தொடுகிறார்.
பார்வதி மேனன் பூ படத்திற்குப்பின் மீண்டும் தமிழில். ‘பூ’வின் மொட்டாய் இருந்தவர் இப்போது நடிப்பில் பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்குகிறார் . காதல் காட்சிகளில் அவரின் முகபாவனைகள் கவிதை. மொத்தமாய் தேசிய விருது பெற்ற நடிகன் தனுஷுக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவள் இல்லை என காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.இவ்வளவு நாள் இவர் வாய்பில்லாமல் வீணாக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இத்தனை அற்புதமான நடிகையை மீண்டும் தமிழ்சினிமாவிற்கு வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி.
இரண்டாம் கட்ட கதாநாயகர்களின் நண்பனாய் வந்து கொண்டிருந்த அப்புகுட்டிக்கு தனுஷ் போன்ற முன்னணி நடிகரின் நண்பனாய் ப்ரொமோசன். அந்த கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார். சூடான் எபிசோடில் உடனிருந்த கஷ்டப்படும் நண்பனாய் ஜெகன். கொலைப்பசியில் தலைவாழை விருந்து சாப்பிடும் கற்பனைக்காட்சியில் தனுஷுக்கு இணையாய் நடித்திருக்கிறார்.
ரஹ்மான் தான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட். பாடல்களிலும் பின்னணியிலும் படத்தின் தரத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு செல்வது நிச்சயாய் ரஹ்மான்தான். நெஞ்சே எழு, இன்னும் கொஞ்ச நேரம், எங்க போன ராசா பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன. தனுஷின் வரிகளில் கடல் ராசா நான் பாடல் கலகலப்பு. ஆனாலும் ரஹ்மானின் பெஸ்ட்களான ஆரம்பகால படங்கள் தந்த குதுகலத்தை இன்றைய ரஹ்மான் இசை ஏனோ தரதவறுகிறது.
படத்தின் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸ். ஒவ்வொரு ஷாட்டும் ஒரு கவித்துவமான போட்டோ ப்ரேமாய் இருக்கிறது. பரத்பாலாவும் இவரும் சேர்ந்து படம் முழுவதும் ஒரு விஷுவல் விருந்து படைத்திருக்கின்றனர்.
ஒரு எளிமையான கதைதான்..அதுவும் இரண்டாம் பாதியில் சூடானில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட தனுஷ் எப்படி தப்பிக்கிறார் என்பதை மெதுவாய் சொல்லும் திரைக்கதைதான். அதனால் ஒரு மாபெரும் திரைப்பட அனுபவத்தை தரும் அளவுக்கு படத்தில் பெரிய விசயமெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த எளிமையான கதையை அற்புதமாய் படமாக்கி, ஒரு அழகான அனுபவமாய் தந்திருக்கிறார் பரத்பாலா.
0 comments:
Post a Comment